கோவையில் குறுமைய அளவிலான கோ-கோ போட்டி – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவையில் சூலூர் குறுமைய அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் அவிநாசி சாலையில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது.

சூலூர் குறுமையத்திற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றிக்காக உற்சாகத்துடன் களமிறங்கினர்.போட்டிகளை ஒருங்கிணைத்த பள்ளியின் தாளாளர் பிரதேவ் ஆதிவேல் கூறுகையில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக கோ-கோ விளையாட்டில் பள்ளி மாணவர்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், அடிப்படை நிலையில் மண்டல மற்றும் குறுமைய அளவிலான போட்டிகளை தொடர்ந்து ஊக்குவித்தால் மட்டுமே மாநில மற்றும் தேசிய அளவில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *