ஆறடி உயரம் வரை தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் – துர்நாற்றம், கொசுத்தொல்லை, பாம்புகள் நடமாட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதி – நிரந்தரத் தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
திருவாரூர்., ஆக. 29
திருவாரூர் நகரின் மையப்பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி, சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஆறடி உயரம் வரை தேங்கி நிற்பதாகவும், இதனால் துர்நாற்றம், கொசுத்தொல்லை மற்றும் நோய் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட திலகர் இரண்டாவது தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி நாகப்பட்டினம்–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள முக்கிய குடியிருப்பு பகுதியாகும்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி, தெருக்கள் மற்றும் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குடியிருப்புகளின் பின்புறம் உள்ள தனியார் பிளாட்டிலும் அதிகளவில் கழிவுநீர் தேங்கி, அப்பகுதி முழுவதும் கழிவுநீர் ஏரி போல் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கழிவுநீர் தேங்கி இருப்பதுடன், சில இடங்களில் ஆறடி உயரம் வரை கழிவுநீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் மற்றும் பல்வேறு வகையான பூச்சிகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து அவ்வப்போது பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நோய் தொற்று அச்சத்தில் மக்கள்
கழிவுநீர் தேக்கம் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
தினமும் குறைந்தது 5 பேர் வரை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கூலி வேலை உள்ளிட்ட அன்றாட வருமானத்தை நம்பி குடும்பத்தை நடத்தி வரும் தங்களுக்கு, மாதந்தோறும் சுமார் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மருத்துவச் செலவு ஏற்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒருபுறம் கழிவுநீரால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதுடன், மறுபுறம் மருத்துவச் செலவும் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
தற்காலிக நடவடிக்கை போதாது
இந்த பிரச்சினை குறித்து திருவாரூர் நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்துள்ளதாகவும், புகாரின் அடிப்படையில் அவ்வப்போது வாகனங்கள் மூலம் கழிவுநீரை அகற்றும் தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், தனியார் பிளாட்டில் அதிகளவில் தேங்கி நிற்கும் கழிவுநீருக்கும், தொடர்ந்து கழிவுநீர் வெளியேறுவதற்கான காரணத்திற்கும் இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் உணவக வளாகம் மீது குற்றச்சாட்டு
மேலும், தங்களது குடியிருப்புகளுக்கு அருகே செயல்பட்டு வரும் மூன்றடுக்கு தனியார் உணவக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட வாடகை அறைகளும், 3 உணவகங்களும் செயல்பட்டு வருவதாகவும், அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரே தங்களது வீடுகளின் பின்புறம் தேங்கி நிற்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் உணவக நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தபோது, திருவாரூர் நகராட்சிக்கு உரிய பணம் செலுத்திவிட்டே செயல்பட்டு வருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இதனால், கழிவுநீர் எங்கிருந்து வெளியேறுகிறது, பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள கோளாறு என்ன, தனியார் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக அகற்றப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிரந்தரத் தீர்வு வேண்டும்
கழிவுநீர் தேக்கம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை உரிய நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக திலகர் இரண்டாவது தெரு பகுதியில் நேரில் ஆய்வு செய்து, சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவுநீரை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை கண்டறிந்து நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தனியார் வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி என்பதால், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவாரூர் நகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.