திருத்துறைப்பூண்டி., ஆக.29
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தோளாச்சேரி கிராமத்தில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து தொடங்கி வைத்தார்.
முகாமிற்கு திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் கூடுதல் பொறுப்பு டாக்டர் ஆர். எத்திராஜ் தலைமை வகித்தார். மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் மா. ஆறுமுகம், திருவாரூர் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் எஸ். சிவகுமார் மற்றும் திருத்துறைப்பூண்டி கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஏ. கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பசுமாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன், குடற்புழு நீக்க சிகிச்சை, மலட்டுத்தன்மை சிகிச்சை, அவசர சிகிச்சை, சினைப் பரிசோதனை மற்றும் செயற்கைக் கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும், கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நவீன கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறப்பாக கால்நடைகளை வளர்த்து வரும் கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாது உப்புக் கலவையும் வழங்கப்பட்டது.
இந்த முகாமின் மூலம் 100-க்கும் மேற்பட்ட பசுமாடுகள், கன்றுகள், வெள்ளாடுகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் பயனடைந்தன.
முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கினர்.