மன்னார்குடி., ஆக.29
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டு பழமையான பின்லே மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அந்த இடம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமானது எனக் கூறி, அதனை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்னார்குடி ஜீயர் வலியுறுத்தியுள்ளார்.
மன்னார்குடி நகரில் ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில், பின்லே மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மைதானத்தில் பின்லே மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்களும் பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிரிக்கெட், கபடி, கோ-கோ, தடகளம், யோகா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு இந்த மைதானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விளையாட்டு மைதானம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. இந்த இடம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் நிலையில், அதனை பள்ளி நிர்வாகத்தின் பயன்பாட்டில் இருந்து மீட்டு, பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு பாதுகாக்க வேண்டும் என்றும், மைதானத்தை சுற்றிலும் நிரந்தரமாக சுற்றுச்சுவர் அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி மன்னார்குடி ஜீயர் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜை அவரது சட்டமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்த ஜீயர், விளையாட்டு மைதானம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி ஜீயர் கூறியதாவது:
மன்னார்குடி நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள இந்த விளையாட்டு மைதானம் ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமானது என்ற தகவல் நீண்டகாலமாக பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, மைதானத்தை பராமரித்து வந்த பள்ளி நிர்வாகம் அதன் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க முயற்சி மேற்கொண்டதாகவும், அப்போது அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், கடந்த வாரம் சட்டமன்றத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர், அந்த விளையாட்டு மைதானம் பள்ளிக்கு சொந்தமானது என தெரிவித்ததுடன், மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக அறிகிறோம்.
கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் இடம் தொடர்பாக இதுபோன்ற கருத்து சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது எங்களைப் போன்ற ஆன்மிக அமைப்பினரிடமும் பொதுமக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி நகரில் பல்வேறு இடங்கள் பல்வேறு அமைப்புகளால் ஆக்கிரமிக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், பின்லே மேல்நிலைப்பள்ளி பயன்படுத்தி வரும் விளையாட்டு மைதானம் தொடர்பான விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தின் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையிலோ அல்லது அந்த இடத்தை சுற்றுச்சுவர் அமைத்து தனிமைப்படுத்தும் வகையிலோ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த இடம் உண்மையில் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து உரிய ஆவணங்கள் மற்றும் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விளையாட்டு மைதானம் பள்ளிக்கு சொந்தமானது என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தால், அந்த தகவலை மறுபரிசீலனை செய்து, உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். கோவில் நிலம் என்ற நிலை உறுதி செய்யப்பட்டால், அதனை பாதுகாத்து பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு தொடர்ந்து கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் நடவடிக்கையை கைவிடுவதுடன், நிலத்தின் உரிமை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரிடம் மனு மூலம் கேட்டுக்கொண்டுள்ளோம் என மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார்.