மன்னார்குடி. , ஆக.29

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பேரையூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பேரையூரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பேரையூர் பாண்டியன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்றவர்கள், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் பேசியவர்கள் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் காரணமாக சமூகங்களுக்கு இடையே சாதி ரீதியான வேறுபாடுகள் ஏற்படும் சூழல் உருவாகி வருவதாக தெரிவித்தனர்.

மேலும், அரசு வழங்கும் சலுகைகள், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் சமூக வேறுபாடின்றி தகுதியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

எனவே, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் அனைத்து சமூக மக்களும் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *