திருவாரூர்., ஆக.29

திருவாரூர்–மன்னார்குடி சாலையில் பல்வேறு இடங்களில் சாலை கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில், தேவர்கண்டநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலையில் ஓஎன்ஜிசி கண்டெய்னர் லாரி சிக்கி தடம் புரண்டது. தொடர்ந்து சாலையோரம் இருந்த ஆலமரக் கிளையில் லாரி மோதியதில், அதில் இருந்த கண்டெய்னர் கீழே சரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது பல்வேறு பகுதிகளில் சாலை சிதிலமடைந்து, வாகனப் போக்குவரத்துக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக திருவாரூர், தேவர்கண்டநல்லூர், கொட்டாரக்குடி, கமலாபுரம், பூதமங்கலம், நாலாநல்லூர், சவளக்காரன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மேடு பள்ளங்களுடன் காணப்படுகிறது. பல இடங்களில் சாலையின் மேற்பரப்பு பெயர்ந்து, ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவற்றை கடந்து செல்லும்போது தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாலையின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி கார், வேன், பேருந்து மற்றும் கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த சாலையில் புதிதாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள மேடு, பள்ளங்களை சரியாக கவனிக்க முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவாரூரில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான கண்டெய்னர் லாரி ஒன்று மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. தேவர்கண்டநல்லூர் பேருந்து நிலையம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஏற்பட்டிருந்த ஆழமான மேடு பள்ளங்களில் லாரியின் டயர் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடம் புரண்டதுடன், சாலையோரம் இருந்த ஆலமரத்தின் கிளையில் மோதியது. இந்த மோதலில் லாரியில் பொருத்தப்பட்டிருந்த கண்டெய்னர் கீழே சரிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக, விபத்து நடைபெற்ற நேரத்தில் கண்டெய்னர் லாரிக்கு பின்னால் வேறு எந்த வாகனமும் வரவில்லை. இதனால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் பின்னால் வந்த வாகனங்கள் மீது கண்டெய்னர் விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கக்கூடிய அபாயம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கண்டெய்னர் கீழே சரிந்ததால் திருவாரூர்–மன்னார்குடி சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் வாகனங்கள் சாலையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கீழே சரிந்திருந்த கண்டெய்னரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கண்டெய்னர் தூக்கி மீண்டும் லாரியின் மீது வைக்கப்பட்டது. இதையடுத்து லாரி அப்புறப்படுத்தப்பட்டு, சாலையில் போக்குவரத்து சீரானது.

‘நிலநடுக்கத்தால் பூமி பிளந்தது போல் சாலை’

திருவாரூர்–மன்னார்குடி சாலையின் பல்வேறு பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதைப் போன்று ஆங்காங்கே பிளந்து, மேடு பள்ளங்களுடன் காட்சியளிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கனரக வாகனங்களுக்கே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தினமும் இந்த சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடனேயே பயணித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, பள்ளத்தின் ஆழம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, திருவாரூர்–மன்னார்குடி சாலையின் முழு நீளத்தையும் நெடுஞ்சாலைத் துறையினர் நேரில் ஆய்வு செய்து, மிகவும் சேதமடைந்துள்ள பகுதிகளை உடனடியாக கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மேலும், சாலை தரமான முறையில் புதுப்பிக்கப்பட்டு, தொடர்ந்து முறையான பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *