தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்.

பூளவாடி அருகே 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பூளவாடி அருகே உள்ள பொம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

மேலும், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, வருவாய்த்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி மற்றும் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின்போது, கிராம மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் 5 நாட்களுக்கு ஒருமுறை லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ள பழைய ஆழ்துளைக் கிணற்றை (போர்) சீரமைத்து, அதன் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *