தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்–கரூர் சாலையில் ஈஸ்வரன் கோவில் அருகே புதிதாக கட்டப்பட்ட அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ், ஆற்றங்கரையோரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடப்பதால், கரையோரத்தில் காய்ந்து கிடந்த சருகுகள், செடி, கொடிகள் மற்றும் புதர்களில் தீ வேகமாக பரவியது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் தீ அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் வயல்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
தீயில் இருந்து எழுந்த கரும்புகை சாலையை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகினர். தீப்பொறிகள் காற்றில் பறந்ததால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவியது.
இதுகுறித்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும், நீண்ட நேரமாகியும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதற்கிடையே, தீயை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் பாலத்தில் நின்று செல்போனில் வீடியோ மற்றும் செல்பி எடுத்ததால் மேலும் அச்சம் ஏற்பட்டது.
ஆற்றங்கரையில் குவிந்து கிடக்கும் காய்ந்த செடி, கொடிகள் மற்றும் புதர்களை அகற்றி, இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அமராவதி ஆற்றுப்பாலம் மற்றும் கரையோரப் பகுதிகளில் போலீசார் தொடர் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நிரந்தரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.