தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், ஆக- 30.
தஞ்சாவூர்மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா” மேதகு ஆயர் ஜீவானந்தம் கொடியை புனிதப்படுத்தி கொடியேற்றி விழாவை இன்று மாலை தொடங்கி வைத்தார்.

பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் மாதம் 30 தேதி முதல் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

இந்த ஆண்டு விழா இன்று மாலை 6.30 மணியளவில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

முன்னதாக மாதாவின் திருவுருவம் வரையப்பட்ட வண்ணக் கொடியுடன் பேண்டு வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் முன் செல்ல, பூண்டிமாதா சொரூபம் சிறிய சப்பரத்தில் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இறைபாடல்களுடன் சுமந்து வந்து, பின்னர் மறைமாவட்ட மேதகு ஆயர் அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்தார்கள்.

கும்பகோணம் மறைமாவட்ட மேதகு ஆயர் ஜீவானந்தம் கொடியை புனிதப்படுத்தி கொடிமரத்தில் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். வாணவேடிக்கை மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க, கூடியிருந்த மக்கள் “மாதாவே வாழ்க, பூண்டி அன்னையே வாழ்க” என்று வேண்டிக்கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு, மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு, பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான சாம்சன் மறையுரை ஆற்றி அருளாசி வழங்கினார். துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ், பூண்டி மாதா தியானமைய இயக்குநர், உதவித்தந்தைகள், ஆன்மீகத்தந்தைகள், சுற்றுவட்ட பங்கு தந்தையர்கள் மற்றும் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *