நாகப்பட்டினம்,ஆக.31-
திட்டச்சேரியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து சாலையோரமாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெருகளில் செல்லும் மின் கம்பிகள் சேதமடைந்து தாழ்வாக செல்கிறது. மேலும் காற்று வேகமாக பேசும் நேரங்களில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் பறப்பதோடு எந்நேரமும் அருந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.