நாகப்பட்டினம்,ஆக.31-
திருமருகல் அருகே இடையிலையே தூர்வாரும் பணியை நிறுத்தப்பட்ட குளம் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளம் தூர்வாரும் பணி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி நத்தம், அறிவிலிமங்கலம் கிராமங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் செட்டிக்குளம், திருகுளள் என்ற 2 குளங்கள் உள்ளது. இந்த குளங்களை தூர்வாரி அப்பகுதி பொதுமக்களுக்கு நீர் மேலாண்மையை உயர்த்திட அரசிடமிருந்து ஒப்புதல் பெற்று குளங்கள் தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாதி குளம் தூர்வாரப்பட்ட நிலையில் குளங்கள் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் குளம் உள்ளது. மேலும் கால்நடைகள், முதியவர்கள் குளத்தில் தவறி விழும் நிலையில் உள்ளது.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதியில் நிறுத்தப்பட்ட குளங்களை முழுமையாக தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.