மன்னார்குடி.,
திமுகவினர் எங்களை விமர்சனம் செய்யட்டும். ஆனால் நல்ல முறையில், ஆரோக்கியமான வகையில் விமர்சனம் செய்ய வேண்டும். அசிங்கமான, கேவலமான, இழிவான முறையில் விமர்சனம் செய்தால் நாங்கள் வாயில் விரலை வைத்துக் கொண்டு அமைதியாக நிற்க மாட்டோம். நாங்களும் நேர்மையான முறையில் விமர்சனம் செய்வோம்” என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான விஸ்வநாதன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வருகை தந்தார். அதன் ஒரு பகுதியாக மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அவர், அப்பள்ளியை நேரில் பார்வையிட்டார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், பள்ளியை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:
துணைவேந்தர் நியமனம் விரைவில்
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டிருப்பது ஏன் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “துணைவேந்தர் நியமனம் தொடர்பான பணிகள் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இது மிகவும் முக்கியமான விஷயம். மேலும், நீதிமன்றங்களில் சில வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உடனடியாக அனைத்து விவரங்களையும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த விவகாரங்கள் விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
“காங்கிரஸ் பதுங்கத் தயாராக இல்லை”
தொடர்ந்து, திமுகவினர் காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் விஸ்வநாதன், “அரசியல் இயக்கம் என்றால் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். பதுங்குவதற்கு நாங்கள் தயாராக இல்லை.
காங்கிரஸ் இயக்கத்தைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறி வருகிறது. கடந்த காலங்களைப் போல் தற்போது இல்லை. திமுகவின் அடிவருடிகளாக இருக்க நாங்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் பேரியக்கம் தற்போது நிமிர்ந்து நிற்கிறது. தமிழகத்தில் போராட்டக் களத்தில் நிற்கவும் தயாராக உள்ளது” என்றார்.
“வாயில் விரலை வைத்துக் கொண்டு நிற்க மாட்டோம்”
மேலும் அவர் கூறுகையில், “திமுகவினர் எங்களை விமர்சனம் செய்யட்டும். நாங்களும் அவர்களை விமர்சனம் செய்வோம். தற்போது நாங்கள் உங்களுடன் கூட்டணியில் இல்லை. நாங்கள் வேறு கூட்டணிக்கு சென்றுவிட்டோம்.
எங்களை நீங்கள் விமர்சனம் செய்தால் நாங்கள் வாயில் விரலை வைத்துக் கொண்டு அமைதியாக நிற்க மாட்டோம். நாங்களும் விமர்சனம் செய்வோம். ஆனால் விமர்சனம் என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்.
எனவே திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, எங்களை நல்ல முறையில், நல்ல தமிழில், நல்ல நடைமுறையில் விமர்சனம் செய்யுங்கள்.
அசிங்கமான முறையில், கேவலமான முறையில், இழிவான முறையில் எங்களை விமர்சனம் செய்ய நேர்ந்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம். ஆனால் எங்களுடைய விமர்சனம் நேர்மையான முறையில் இருக்கும்” என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.