கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி திருக்கோயிலில் கடந்த சில நாட்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களை கவரும் வகையில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மகா கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வாக யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த சிறப்பு நிகழ்வில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார் கலந்து கொண்டு கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பித்தார். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து கோயிலில் நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் அமைச்சர் சம்பத்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகரை வழிபட்டனர்.
அருள்மிகு சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, விநாயகருக்குரிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமையான சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் மத்தியில் ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் சர்வ சதகம் குருமூர்த்தி சிவாச்சாரியார்,கோவில் அர்ச்சகர் உமாபதி சிவம், ரவிச்சந்திர சிவாச்சாரியார்,செந்தில்குமார் சிவம்,சுந்தரமூர்த்தி குருக்கள் ஆகியோர் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.