கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.இ. பத்மஜா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி நகர மையப் பகுதியிலிருந்து துருகம் சாலை வழியாக அமைக்கப்பட உள்ள புதிய ரயில்வே பாதை மற்றும் ரயில்வே மேம்பாலம் தொடர்பான திட்டத்தில், பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வடிவமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், தற்போதுள்ள முன்மொழியப்பட்ட ரயில்வே மேம்பாலத் திட்டத்தால் பொதுமக்கள் மற்றும் பல்வேறு வணிகத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மாற்று வழிமுறைகளை ஆய்வு செய்து, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின்போது அரிசி ஆலைகள் சங்கத்தினர், மின் மற்றும் மின்னணுப் பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தினர், ஆட்டோமொபைல் பழுது பார்ப்போர் சங்கத்தினர் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனையாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.