தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் கால்நடை மருந்தகங்களின் பணிநேரத்தை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இடையறாது செயல்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, சங்கத்தின் தலைவர் சேரா. சுப்ரமணியன், செயலாளர் சு. ராமசாமி, துணைத் தலைவர் சிவசபாபதி ஆகியோர் திருப்பூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சித்ராவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிராமப்புறங்களில் விவசாயிகள் அதிகாலை நேரத்தில் கால்நடைகளில் பால் கறந்து, பால் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று பாலை வழங்கிவிட்டு வீடு திரும்புவதற்கு காலை 9 மணி வரை ஆகிறது. இதனால், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை சிகிச்சைக்காக கால்நடை மருந்தகங்களுக்கு அழைத்து வருவதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

தற்போது கால்நடை மருந்தகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படுகின்றன. அதன்பிறகு 3 மணி நேர இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் செயல்படுவதால், தொலைதூரப் பகுதிகளில் இருந்து கால்நடைகளுடன் வரும் விவசாயிகள் அவசர சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் கால்நடைகள் உயிரிழப்பதுடன், விவசாயிகளுக்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

மேலும், ஆண்டுக்கு 100 நாட்களுக்கு மேல் காலை 7 மணி முதல் 9 மணி வரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், கால்நடை மருந்தகங்களின் பணிநேரத்தை மாற்றியமைப்பதால் தடுப்பூசி பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

எனவே, விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, கால்நடை மருந்தகங்களின் பணிநேரத்தை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்ச்சியாக செயல்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை 2026-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *