மணலி புதுநகர்:
மணலி புதுநகரில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக சென்று நிறுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
மணலி புதுநகர் நாபாளையம் பாலம் அருகே மூன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள், இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இப்பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நிலையில், கனரக வாகன ஓட்டுநர்கள் சர்வீஸ் சாலை வழியாக வந்து குடியிருப்பு பகுதிகளில் லாரிகளை நிறுத்தி செல்வதாகவும், பள்ளி மாணவ, மாணவிகள் அந்த வழியாகச் செல்லும்போது கனரக வாகனங்களை பின்னோக்கி இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் முதியவர்கள், இளைஞர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் நேரத்தில் சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படும் சூழலும் உருவாகி வருவதாக பொதுமக்கள் மணலி புதுநகர் காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் சரவணகுமார், உதவி ஆய்வாளர் வெற்றிவேல் மற்றும் காவல்துறையினர் ராஜா, மதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கிரேன் உதவியுடன் கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத வகையில் இரும்புத் தூண்கள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட மணலி புதுநகர் காவல்துறையினருக்கு அப்பகுதி இளைஞர்கள், ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்ததுடன், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.