புதுச்சேரி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் ஓட்டக் கூடாது என்றும், பள்ளி வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், கார் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வரக் கூடாது என்றும் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கடந்த 19.08.2026 அன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு என்பது தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து சாலைப் பயனாளர்களின் கூட்டு பொறுப்பாகும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டாததையும், பள்ளிக்கு வாகனங்களை கொண்டு வராததையும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வயது வரம்பை மீறி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி காலை ஒன்றுகூடல், வகுப்பு நேர கலந்துரையாடல்கள் மற்றும் பிற பள்ளி செயல்பாடுகள் வாயிலாக மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போது மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாத வகையில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பையும் பள்ளித் தலைமை கோர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட அறிவுறுத்தல்களை பள்ளிகள் முக்கியத்துவத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பள்ளித் தலைமை நிர்வாகங்கள் அவற்றை கண்காணித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
S. செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்