மன்னார்குடி அருகே 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு: கொதித்தெழுந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் — மன்னார்குடி–கும்பகோணம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடக்கம்
மன்னார்குடி., செப்.02
15 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் தவித்த மக்கள்… அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு… ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம்… மன்னார்குடி அருகே நடைபெற்ற இந்த சாலை மறியலால் மன்னார்குடி–கும்பகோணம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள குருவைமொழி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் விநியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மின் மோட்டார் பழுதடைந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
வயல் தண்ணீரை குடிக்கும் அவலம்
குடிநீர் கிடைக்காததால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வேறு வழியின்றி மூவாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை எடுத்து வந்து குடிநீராக பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும், பழுதடைந்த மின் மோட்டாரை உடனடியாக சீரமைக்கவும் கோரி மன்னார்குடி வட்டார ஊராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பல நாட்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
காலிக்குடங்களுடன் கொதித்தெழுந்த பெண்கள்
இதனால் ஆத்திரமடைந்த குருவைமொழி கிராம மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் காலிக்குடங்களுடன் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் குருவைமொழி பகுதியில் திரண்டனர்.
பின்னர் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். “குடிநீர் வழங்க வேண்டும்; பழுதடைந்த மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்ய வேண்டும்” என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போலீசாருடன் தள்ளுமுள்ளு; பரபரப்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தங்களது கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், பழுதடைந்த மின் மோட்டாரை விரைந்து சீரமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
“குடிநீர் என்பது அடிப்படை தேவை. 15 நாட்களாக தண்ணீருக்காக அலைந்தும் நடவடிக்கை இல்லை. இனியும் காலதாமதம் செய்தால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்” என பொதுமக்கள் தெரிவித்தனர்.
குடிநீருக்காக பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் இறங்கி போராடிய சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.