திருச்சி: தமிழகத்தின் மத்தியப் பகுதியாக விளங்கும் திருச்சி, சோழர் கால ஆட்சி முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரை நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்ட நகரமாக திகழ்கிறது. சென்னை தலைநகர் மாநகரமாகவும், கோவை வர்த்தக மாநகரமாகவும், மதுரை தொழில் மற்றும் சுற்றுலா நகரமாகவும் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், திருச்சியின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு வேகமடையவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.

இருப்பினும், உயர்கல்வி நிறுவனங்கள், பன்னாட்டு விமானப் போக்குவரத்து, 24 மணி நேர ரயில் மற்றும் பேருந்து சேவைகள் என பல்வேறு வசதிகளை திருச்சி கொண்டுள்ளது. இதனால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆன்மிக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா உள்ளிட்ட துறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்து வருகின்றன.

திருச்சி நகருக்கு வரும் வெளிநாட்டு மற்றும் பிற மாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான தரமான தங்குமிட வசதிகளில் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருவிழாக்கள், முகூர்த்த நாட்கள், அரசியல் கட்சி மாநாடுகள், திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் காலங்களில் ஓட்டல் அறைகள் கிடைப்பது சவாலாக உள்ளது

இந்த வாய்ப்பை புதிய முதலீட்டுக்கான களமாக தொழில்துறையினர் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக திருச்சியில் பல்வேறு நட்சத்திர ஓட்டல் திட்டங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. நகரின் மையப்பகுதியில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நிலம் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதிக கூட்டம் உள்ள நாட்களில் தினமும் சுமார் 20,908 பேர் வருகை தரும் நிலையில், தர நிர்ணயம் செய்யப்பட்ட ஓட்டல்களில் ஒரே நேரத்தில் சுமார் 16,974 பேருக்கு மட்டுமே தங்கும் வசதி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் உச்சகட்ட காலங்களில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு தங்குமிட பற்றாக்குறை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

திருச்சியின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் புதிய ஓட்டல்கள் உருவாகும்போது, சுற்றுலா பயணிகளுக்கு தரமான தங்குமிட வசதி கிடைப்பதுடன், வேலைவாய்ப்புகளும் பெருகும். இதன் மூலம் திருச்சி நகரம் சுற்றுலா, மருத்துவம், கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த சேவை மையமாக மேலும் வளர்ச்சி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. திருச்சி (திருச்சிராப்பள்ளி) தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் மற்றும் பொருளாதார மையங்களில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருகிறது. புவியியல் ரீதியாக தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து வசதி மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பில் இந்த நகரம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது

திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *