நாமக்கல்.
செப்டம்பர் 02.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள், அடுப்பில்லா சமையல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு (02.09.2026) தெரிவிக்கப்பட்டது

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் தனியார் (KKP) தொழில் நிறுவனங்கள் சார்பில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர்
லி. மதுபாலன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு விதைப் பந்துகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பேச்சு, ஓவியம், கட்டுரை, அடுப்பில்லா சமையல் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தயாரித்த உணவுப் பொருட்கள் அடங்கிய, அடுப்பில்லா சமையல் போட்டியில் 80-க்கும் மேற்பட்ட கம்பு, சோளம், ராகி, உள்ளிட்ட சிறுதானியங்கள், நீர் ஆகாரங்கள், சத்தான இயற்கை உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இவற்றை மாவட்ட ஆட்சியர், மாணவிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது இயற்கை உணவின் அவசியம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறை இணை பேராசிரியர் இ.ஜி. வெஸ்லி, உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் லி. மதுபாலன்,

சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பெருமளவில் குறைக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. சமீபத்தில் நேபாளத்தில் நடந்த வெள்ள பாதிப்பிற்கு காலநிலை மாற்றமே காரணமாகும். பல வளர்ந்த நாடுகள் அதிகமாக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் தான் நேபாளம் போன்ற நாடுகளில் இயற்கை சீற்றம் ஏற்படுவதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியுள்ளார். சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது மனிதர்களை மட்டுமல்லாமல் பிற உயிரினங்களையும் பாதிக்கிறது. எனவே சுற்றுச்சூழலை நம்மால் முடிந்த வகையில் பாதுகாக்க முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் இந்த அரசு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை பாராட்டுகிறோம்.

விதைப் பந்துகள் தயாரித்து அவற்றை காலி இடங்களில் தூவி வளர்ப்பது குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், செடிகள் நட்டு வளர்க்கலாம். அதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இ. மாதவன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கே.எஸ். புருஷோத்தமன், தொழில் நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் பெ. நல்லதம்பி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை க. சுமதி, தமிழ்நாடு பசுமை இயக்கம் மாவட்ட தொடர்பு அலுவலர் சி.ஆர். இராஜேஷ் கண்ணன், பள்ளி ஆசிரியைகள், மாணவிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *