தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

விநாயகர் சிலை ஊர்வலம்: போலீஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்-தாராபுரம் டிஎஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெற உள்ள விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் தொடர்பாக, ஊர்வலம் நடத்தும் அமைப்புகளின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

தாராபுரத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னர் விஜர்சன ஊர்வலம் நடைபெற உள்ளது.

இதன்படி, இந்து முன்னணி சார்பில் தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் உள்ள அமராவதி சிலை அருகில் இருந்தும், இந்து மக்கள் கட்சி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தாராபுரம்–உடுமலை சாலை ரவுண்டானா அருகில் இருந்தும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஊர்வலத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய காவல்துறை விதிமுறைகள், ஊர்வலப் பாதை, சிலைகள் வைக்கப்படும் இடங்கள், பங்கேற்பாளர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விளக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி சிவகுமார், கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து எந்தெந்த இடங்களில், எந்த அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்ததோ, அதே இடங்களில் மட்டும் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்தி, வழக்கமான நடைமுறையின்படி விஜர்சன ஊர்வலத்தில் எடுத்துச் செல்லலாம் என்றார்.

புதிதாக எந்த இடத்திலும் விநாயகர் சிலைகளை நிறுவி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து சிலைகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், இடையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சிலை வைக்கத் தவறியிருந்தவர்கள், அதற்கான உரிய ஆதாரங்களை காவல்துறையிடம் சமர்ப்பித்த பின்னர், விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த ஆண்டு நடைபெறும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில், இதுவரை சிலை வைக்கப்படாத புதிய இடங்களில் சிலைகளை நிறுவி, அவற்றை ஊர்வலத்தில் பங்கேற்கச் செய்வதற்கு அனுமதி வழங்கப்படாது என காவல்துறை தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஊர்வலத்துக்காக காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் செல்லாமல், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒழுங்குடன் ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஊர்வலத்தின்போது அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு விழாவை கொண்டாடுவதில் காவல்துறை தலையிடாது என்றும், அதேவேளையில் நடைமுறையில் உள்ள அனைத்து விதிமுறைகளும் முறையாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும் டிஎஸ்பி சிவகுமார் தெரிவித்தார்.

எனவே, விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தும் அமைப்புகள் தங்களுக்குள் சுயக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டு தாராபுரத்தில் இந்து முன்னணி சார்பில் 147 விநாயகர் சிலைகளும், இந்து மக்கள் கட்சி சார்பில் 12 சிலைகளும், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 4 சிலைகளும் நிறுவப்பட்டு, விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் தாராபுரம் கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர் சங்கிலி, பாலசுப்பிரமணி, சின்னகுமரவேல்சாமி, வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்து மக்கள் கட்சி சார்பில் ஈஸ்வரன், செல்வராணி உள்ளிட்ட நிர்வாகிகளும், 5 பெண்கள் உள்பட மொத்தம் 28 பேரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குண்டடம் காவல் ஆய்வாளர் விவேக், தாராபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *