மதுராந்தகம், செப்.: நதிகளுக்கு புத்துயிரூட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ‘நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினத்தை’ முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் வளையாபுத்தூர் கிராமத்தில் விவசாயி சத்தியபிரபு என்பவரது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலர்கள், காவேரி கூக்குரல் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
நதிகளுக்கு புத்துயிரூட்டும் பணியில் காவேரி கூக்குரல்
நதிகளுக்கு புத்துயிரூட்டுவதுடன் விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் விவசாய நிலங்களில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், விவசாயிகளுக்கு நீண்டகால பொருளாதாரப் பலன்களை உருவாக்குவதிலும் இவ்வியக்கம் கவனம் செலுத்தி வருகிறது.
ஈஷாவின் பல்வேறு திட்டங்களின் மூலம் இதுவரை தோராயமாக 13.3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் நோக்கில் பேரூர் மற்றும் தருமை ஆதீனங்களுடன் இணைந்து அரச மரக்கன்றுகள் நடும் பணியையும் காவேரி கூக்குரல் மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 1.20 கோடி மரங்களை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 35.70 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டும் மரம் சார்ந்த விவசாயம்
தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி உள்ளிட்ட விலைமதிப்புமிக்க 20 வகையான டிம்பர் மரங்கள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இம்மரங்களை விவசாய நிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நீண்டகாலத்தில் குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகிறது. மரங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்திலும் அவற்றுக்கு இடையே ஊடுபயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறுவதற்கான வழிமுறைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சமவெளிப் பகுதிகளில் வளரக்கூடிய கரிமுண்டா ரக மிளகு சாகுபடியை மரங்களுடன் இணைத்து மேற்கொள்வதன் மூலம் பல விவசாயிகள் தொடர் வருமானம் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
ரூ.5-க்கு மரக்கன்றுகள்
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஈஷா நர்சரிகளில் விவசாயிகளுக்குத் தேவையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு மரக்கன்று ரூ.5 என்ற குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
வரும் மழைக்காலத்தில் விவசாயிகள் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு ஏதுவாக, தேவையான அளவு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது விநியோகத்திற்குத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 6-ல் இலவச மரம் சார்ந்த விவசாய கருத்தரங்குகள்
மர விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கும் வகையில், மரம் சார்ந்த விவசாயம் குறித்த மண்டல கருத்தரங்குகள் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளன. கன்னியாகுமரி, திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருச்சி, திருநெல்வேலி, தேனி, பெரம்பலூர், தர்மபுரி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இக்கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
கருத்தரங்குகளில் மரம் சார்ந்த விவசாயத்தின் முக்கியத்துவம், மண் மற்றும் நிலத்தின் தன்மைக்கு ஏற்ற மரங்களைத் தேர்வு செய்தல், மரக்கன்றுகளை நடவு செய்தல், மரங்களைப் பராமரித்தல், ஊடுபயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90079, 94425 90081 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.
மரக்கன்றுகள் தேவைப்படுவோர் மற்றும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து இலவச ஆலோசனைகளைப் பெற விரும்பும் விவசாயிகள் காவேரி கூக்குரல் பொது எண் 80009 80009 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.