கொளத்தூர், செப். 3:
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் அருகேயுள்ள கண்ணாமூச்சி காவாலாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா (70). ஏழை முதியவரான இவர், சொந்த வீடோ, விவசாய நிலமோ இல்லாத நிலையில், ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வசித்து வருகிறார்.

இவர் கண்ணாமூச்சி காப்புக்காடு சின்னமலை பகுதியில் தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், தனக்குச் சொந்தமான வெள்ளாடுகளைப் பட்டியில் அடைத்து பராமரித்து வந்தார். இவருக்கு மனாவதி என்ற மகளும், சௌந்தர்யா என்ற பேத்தியும், நவீன் என்ற பேரனும் உள்ளனர்.

5 ஆடுகள் உயிரிழப்பு:
இந்நிலையில், நேற்று (02.09.2026) நள்ளிரவு கண்ணாமூச்சி காப்புக்காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி ஒன்று, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளைத் தாக்கியுள்ளது. இதில் 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் ஒரு ஆட்டை சிறுத்தை தூக்கிச் சென்றதாகவும், 2 ஆடுகள் கழுத்தில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் மனிதநேய உதவி:
சம்பவம் குறித்து அறிந்த கொளத்தூர் காவல் ஆய்வாளர் சி.கோ. மஞ்சுநாதன், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்டார். ஒரே வாழ்வாதாரமாக இருந்த ஆடுகளை இழந்து தவிக்கும் சரோஜாவின் குடும்பத்தின் வறுமை நிலையை அறிந்த அவர், தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.10,000 நிவாரண நிதியுதவி வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கஷ்டமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து உடனடியாக நிதியுதவி வழங்கிய கொளத்தூர் காவல் ஆய்வாளர் சி.கோ. மஞ்சுநாதனின் மனிதநேயச் செயலை சரோஜாவின் குடும்பத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *