நாகப்பட்டினம்,செப்.5-
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் கிராம அளவில் மின்னனு பயிர் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பணியில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்வணிகம், அட்மாதிட்டம் இணைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியானது தங்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு செல்போனில் கிராப் சர்வே செயலி பதிவிறக்கம் செய்து விளைநிலங்களில் ஜிபிஎஸ் நிர்வகித்து பணி மேற்கொள்கின்றனர்.
இந்த சர்வே மூலம் நில அமைவிடம் அதன் புகைப்படம் துல்லியமாக பதிவேற்றம் செய்யபடுவதால் வேளாண்மைதுறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்துவதிலும் குறிப்பிட்ட நிலபுலன்களில் உள்ள விவசாயிகள் என்ன பயிர் சாகுபடி செய்கின்றனர்
என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். வறட்சி வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் பாதிப்புகளை துல்லியமாக கணக்கீடு செய்வதற்கும், பயிர் கடன் வழங்குவதிலும் எந்தெந்த பகுதிகள் தகுதியானவை என்பதை அறிவதிலும் உதவும் மேலும் நிலபுலன்களில் வரையறைக்கு ஏற்ப உரம்,பூச்சி மருந்து எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்த முடியும். ஆகையால் மின்னணு பயிர் கணக்கீட்டு பணியானது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இப்பணியினை மேற்கொள்வதற்கு கிராமங்களில் உள்ள ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் படித்த இளைஞர்கள்,படித்தபெண்கள் மற்றும் தன்னார்வலர்கள்உழவன் செயலியில் உள்ள தன்னார்வ பயிர் கணக்கெடுப்பாளர் பதிவு பகுதியில் சென்று தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் டிஜிட்டல் பயிர் சர்வே பணி மேற்கொள்பவர்களுக்கு ஒரு உட்பிரிவுக்கு நடப்பு தரிசு ரூ.3, முதன்மை பயிருக்கு ரூ.5,கூடுதல் பயிருக்கு ரூ.9 வழங்கப்படும் அவர்களின் கணக்கீடு செய்யும் புலன்களுக்கு ஏற்ப அவர்களது வங்கி கணக்கில் மின்னணு முறையில் வரவு வைக்கப்படும் எனவே ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் முகமது சாதிக் தெரிவித்துள்ளார்.