தாராபுரம் செய்திகளை பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடத்தில் திருப்பூரைச் சேர்ந்த நிட் சிட்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 38 கார்கள் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பந்தய மைதானத்தில் மேடு, பள்ளங்கள் மற்றும் சவாலான வளைவுகளைக் கொண்ட பாதையில் கார்கள் சீறிப்பாய்ந்தன. போட்டியை காண தாராபுரம், திருப்பூர், கோவை, ஈரோடு, குண்டடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போட்டி மைதானத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இதுகுறித்து போட்டியில் பங்கேற்ற வீரர் பாபிப் கூறியதாவது:

“நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக உள்ளது. கார் பந்தயம் என்பது வேகமாக காரை ஓட்டுவது மட்டுமல்ல. முறையான பயிற்சி, காரை கட்டுப்படுத்தும் திறன், உடல் தகுதி, மனத்திடம், தொழில்நுட்ப அறிவு மற்றும் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது அவசியம்.

பந்தயத்திற்காக காரில் இன்ஜின், சஸ்பென்ஷன், பிரேக், பாதுகாப்பு ரோல் கேஜ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக பல லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. மேலும், பயிற்சி, பராமரிப்பு, உதிரி பாகங்கள், போட்டிக் கட்டணம் மற்றும் போட்டி நடைபெறும் இடத்திற்கு வாகனத்தை கொண்டு செல்வது உள்ளிட்ட செலவுகளும் உள்ளன.

ஸ்பான்சர் கிடைக்காததால் பல இளம் வீரர்கள் சொந்த பணத்தை செலவு செய்து போட்டிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. குறிப்பாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் செலவுகள் மேலும் அதிகரிக்கின்றன. எனவே, திறமையான இளம் வீரர்களுக்கு அரசு மற்றும் ஸ்பான்சர் நிறுவனங்கள் உரிய ஆதரவு வழங்க வேண்டும்.

கார் பந்தயம் வீரர்களுக்கு தன்னம்பிக்கையையும் சவால்களை எதிர்கொள்ளும் மனநிலையையும் வளர்க்கிறது. திறமைக்கு பயிற்சியும், பயிற்சிக்கு பாதுகாப்பும், சாதனைக்கு ஸ்பான்சர் ஆதரவும் கிடைத்தால் தாராபுரம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்தும் உலக அளவில் சாதிக்கும் கார் பந்தய வீரர்களை உருவாக்க முடியும்.

பந்தய மைதானத்தில் மட்டுமே வேகம்; பொதுச்சாலையில் பாதுகாப்பு என்பதே முக்கியம். ரேஸ் டிராக்கில் வாகனத்தை இயக்குவதற்கும் பொதுச்சாலையில் ஓட்டுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலைகளில் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்ட வேண்டும்” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *