முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பள்ளித்தென்னலில் இன்று இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் தொண்டு அறக்கட்டளை, ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளை மற்றும் தென்னல் சத்குரு கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் நினைவாக இணைந்து நடத்திய இம்முகாம், பள்ளித்தென்னல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிரிஜா முன்னிலை வகித்தார். கண் மருத்துவர் டாக்டர் சுகந்தி பிரபாகர், ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளை நிறுவனர் ராஜாராம்குமார், சத்குரு ஹோட்டல் நிறுவனர் அமர்நாத் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். ஒன்றிய கவுன்சிலர் அமுதா தனஞ்செழியனும் பங்கேற்றார்.

முகாமில் கண்புரை உள்ளிட்ட பல்வேறு கண் பாதிப்புகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களுக்கு மறு பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட பார்வைக் குறைபாடுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு முழுமையான கண் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் அடிப்படையில் கண்ணாடி தேவைப்படுவோருக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்படும் என அறக்கட்டளை நிறுவனர் ராஜாராம்குமார் தெரிவித்தார்.
இம்முகாமில் பள்ளித்தென்னல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள், ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளை, சத்குரு ஹோட்டல் நிறுவனர் அமர்நாத் மற்றும் அன்னை கண் மருத்துவமனை ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.