பொள்ளாச்சி: இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) சார்பில் ICSE மற்றும் ISC பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 25-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி, பொள்ளாச்சியில் உள்ள திசா வாழ்வியல் பள்ளியில் கோலாகலமாக தொடங்கியது.
போட்டியின் 7-வது ஆண்டான 2026-ம் ஆண்டுக்கான டென்னிஸ் போட்டியின் தொடக்க விழா திசா வாழ்வியல் பள்ளி வளாகத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மருத்துவர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கொடியேற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.
திசா வாழ்வியல் பள்ளி சார்பில் இப்போட்டி இரண்டாவது முறையாக ஏற்று சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பீகார், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் தீவுகள், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 135-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தேசிய அளவிலான இப்போட்டியில் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் மாணவர்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.