தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குடிநீர் வழங்க வலியுறுத்தி குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முறையீடு.!

முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அருகே, குண்டடம் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய குமாரபாளையம் ஊராட்சிப் பகுதியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக பெரிய குமாரபாளையம் பகுதியில் குடிநீர் மட்டுமின்றி அன்றாட தேவைகளுக்குத் தேவையான தண்ணீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட நீராதாரங்களிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், உப்புத் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை இப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடத்துடன் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் குண்டடம் போலீஸார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், வரும் புதன்கிழமை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தைத் தொடர்ந்து, பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *