திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் தேங்கும் பகுதிகள், வெள்ளப்பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள், மீட்பு நடவடிக்கைகளுக்கான உபகரணங்கள், தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் மரம் அறுக்கும் கருவி, மோட்டார் படகு, மிதவை ஆடைகள், தீயணைப்பு உபகரணங்கள் உள்ளிட்ட மீட்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கூட்டத்தைத் தொடர்ந்து 32 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நீண்ட நேரம் காத்திருந்ததாக புகார்
அமைச்சரின் வருகையையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை முதலே பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குறிப்பாக பேரிடர் மேலாண்மை உபகரணங்கள் தொடர்பான ஆய்வுக்காக தீயணைப்புத்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காலை முதலே வெயிலில் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், அதிகாரிகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மாலை நேரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் பேரிடர் மேலாண்மை உபகரணங்களை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் குவிந்ததாக சர்ச்சை
இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 200-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்தல், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
அரசு அலுவலக வளாகத்தில் கட்சி நிர்வாகிகள் அதிகளவில் திரண்டது குறித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
“சாகுபடி செய்யலாமா?” – மழை குறித்து அமைச்சர் பதில்
ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம், தற்போது விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கலாமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “மழை வரும்… வெள்ளம் வரும்… வடகிழக்கு பருவமழை கனமாக பெய்யும்” என்று தெரிவித்தார்.
விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்வது தொடர்பான கேள்விக்கு மழை மற்றும் வெள்ளம் குறித்தே அமைச்சர் பதிலளித்தது செய்தியாளர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
பயிர் காப்பீட்டு பணிகள் தீவிரம்
திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்ட பணிகள் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாயிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விவசாயிகளுக்கு தேவையான கடன் உள்ளிட்ட வசதிகளில் எந்தவித தடையும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
பயிர்க்கடன் தள்ளுபடிக்கு அரசாணை எப்போது?
விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடிக்கு இதுவரை அரசாணை வெளியாகவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்குவதில் எந்தவித தடையும் இருக்காது என்றும், முதலமைச்சர் அறிவித்துள்ள தொகை கூட்டுறவு சங்கங்களுக்கு வந்து சேரும் என்றும் தெரிவித்தார்.
கர்நாடகத்திடம் கூடுதல் தண்ணீர் – அமைச்சரின் பதில்
கர்நாடக அரசிடம் கூடுதல் தண்ணீர் கேட்டு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் செங்கோட்டையன் “கொடுப்பாங்க… அழுத்தமா?” என பதிலளித்தார்.
அவரது இந்த பதில் செய்தியாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
“அமைச்சரவையில் மாற்றம் வருமா?” – கேள்வியால் பரபரப்பு
இதனிடையே தமிழக அமைச்சரவையில் மாற்றம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன், “அதெல்லாம் யார் சொன்னா? நீங்கள் தான் கூறுகிறீர்கள்” என்று பதிலளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் இருந்த மைக்கை அகற்றியபடி அங்கிருந்து சென்றார்.
அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில், அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதேபோல் அரசியல் தொடர்பான மேலும் சில கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற அரசு ஆய்வுக்கூட்டம் ஒருபுறம் நடைபெற்ற நிலையில், அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் மழை, விவசாயக் கடன், காவிரி நீர் மற்றும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விகள் முக்கியத்துவம் பெற்றதால் திருவாரூர் அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.