மாணவ, மாணவியர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தூய பவுல் மகாஜன உயர்நிலைப் பள்ளி மற்றும் எண்ணூர் நேரு நகர் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் காவல்துறையினர், சிங்கப்பெண் படையினர் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
எண்ணூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எண்ணூர் காவல்துறையினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு செல்போன் பயன்பாடு மற்றும் சமூக வலைதளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கினர். குறிப்பாக, பெற்றோருக்குத் தெரியாமல் செல்போனில் சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்துவது, குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை தவறான முறையில் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
மேலும், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடையேயும் போதைப்பொருள் தடுப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
“போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற, எனது பங்களிப்பை எப்போதும் நல்குவேன்” என்று மாணவ, மாணவியர்கள் உளமார உறுதி ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வும், சமூகப் பொறுப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.