அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு இன்று 5 நாள் வங்கி சேவை நடைமுறைப்படுத்துதல் மற்றும் புதிய PLI (Performance Linked Incentive) திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் தோழர் செந்தில் குமார் கலியபெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார்.
இதில் அரியலூர் வங்கி தொழிர்சங்கங்களின் கூட்டு முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் மணிராஜ் மற்றும் பல்வேறு வங்கி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
5 நாள் வங்கி சேவை என்பது வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையாகும்.
வங்கித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன், வேலை–வாழ்க்கை சமநிலை மற்றும் சமூக வாழ்க்கையை கருத்தில் கொண்டு, 5 நாள் வங்கி சேவையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், புதிய PLI திட்டம் தொடர்பான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கவலைகள் மற்றும் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு, அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து நியாயமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் அரியலூர் மாவட்ட ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்ச்சி நிறுவன இயக்குநர் திரு. காசிராஜன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.