கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான நான்காம் தலைமுறை ‘ஸ்ட்ரைக்கர் மாகோ 4 ஸ்மார்ட் ரோபோடிக்ஸ்’ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனத்தின் நவீன ரோபோ தொழில்நுட்பம்,இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ய ஒட்டல் அரங்கில் நடைபெற்றது..
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,தமிழகமக்கள் நல் வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான நான்காம் தலைமுறை தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து வைத்தார் புதிய ஸ்ட்ரைக்கர் மாகோ ரோபோட்டிக் தொழில் நுட்பம் வாயிலாக பகுதி முழங்கால், முழு முழங்கால், இடுப்பு, தோள்பட்டை உள்ளிட்ட பல்வேறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை நோயாளிகளின் உடலமைப்புக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு, அதிக துல்லியத்துடன் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தமிழகம் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக இருந்து வருவது பெருமைக்குரியது என தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்படும் இதுபோன்ற நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் பயன்கள் பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களை விரைவில் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் பேசுகையில், நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் ராயல் கேர் மருத்துவமனை நவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் நடேசன் கூறுகையில், நோயாளியின் உடலமைப்புக்கு ஏற்ப அறுவை சிகிச்சையை திட்டமிடவும், சிக்கலான மறுமூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளையும் அதிக துல்லியத்துடன் மேற்கொள்ளவும் இந்த ரோபோ தொழில்நுட்பம் உதவும் என தெரிவித்தார்.