நாகப்பட்டினம் ,செப்.12-
திருமருகல் அருகே சாலையோரத்தில் சேதமாகி கிடக்கும் இரும்பு தடுப்பு தகடுகள் – தடுப்புகள் இல்லாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும். இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இரும்பு தகடுகள்
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்து திருச்செங்காட்டங்குடியில் திருமருகல் – திருவாரூர் நெடுஞ்சாலையில் சாலையின் வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும். இந்த இடத்தில் விபத்துகளை தடுப்பதற்காக இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். ஆனால் இந்த தடுப்புகள் சாலை அகலப்படுத்தும் பணியின் போது உடைந்து சேதமாகி பல மாதங்களாக இரும்பு தகடுகள் சாலையோரம் உள்ள வயல் மற்றும் வாய்க்காலில் கிடக்கிறது.
சீரமைக்க வேண்டும்
பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் மற்றும் எண்ணற்ற வாகனங்கள் இந்த சாலையில் தினமும் சென்று வருகின்றன. இந்த இடத்தில் பல விபத்துகள் நடந்திருந்த போதிலும் சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர் இந்த இடத்தில் விபத்துக்குள்ளானார். எனவே உடைந்து சேதமாகி சாலையோரம் கிடக்கும் இரும்பு தகடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.