எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே அமையவுள்ள புதிய சிவ ஆலயத்தின் பூமி பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் தைவான், ஜப்பான் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த வெளிநாட்டுப் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி அருகேயுள்ள மணல்மேடு பகுதியில், உப்பனாற்றங்கரையில் சிவபெருமானுக்கு ‘மெய்ஞான ஈஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் புதிதாகத் திருக்கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, ஆலயக் கட்டுமானப் பணிகளுக்கான ஸ்தல சுத்தி, வாஸ்து சாந்தி ஹோமம் மற்றும் பூமி பூஜை இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக அமைக்கப்பட்டிருந்த 13 யாக குண்டங்களில், வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்புப் பூஜைகளை முன்னின்று நடத்தினர்.இப்பூஜையுடன் புதிய ஆலயக் கட்டுமானப் பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன. இந்த மங்கல நிகழ்வில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தைவான், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் சிவபக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை நாடி செல்வ முத்துக்குமரன், நாடி மாமல்லன் செய்திருந்தனர்.