கோவை: கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் மின்தடை, அரசின் சில முடிவுகள் உள்ளிட்ட காரணங்களால் தொழில் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தம் செய்யப்பட்ட சில தொழிற்சாலைகள் ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். தமிழகத்தில் புதிய முதலீடுகள் வர அரசு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள இடத்தில் மீனவர்கள், சுற்றுச்சூழல், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால், அந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கூறினார்.
சென்னை விமான நிலையத்தை தொழில் வளர்ச்சிக்கும் ஏற்றுமதிக்கும் மேம்படுத்துவது அவசியம் என்றும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது தங்களது தொடர் கோரிக்கை என்றும், எந்த ஆட்சி வந்தாலும் இதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் கூறினார்.
இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், கட்சி மாறி வேறு சின்னத்தில் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் மக்கள் மத்தியில் ஒரு பாடமாக அமையும் என தெரிவித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது தொடர்பாக, தனிநபர்களை கொச்சைப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்; அதே நேரத்தில் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்றார்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக, மக்கள் எதிர்ப்பை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
எல் அண்ட் டி பைபாஸ் சாலைகள் பணிகளை அரசு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும், லஞ்சம் இல்லாத நிர்வாகம் நடைபெறுமானால் அதை வரவேற்போம் என்றும் ஈஸ்வரன் தெரிவித்தார்.