நீடாமங்கலம்.,
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீடாமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு, குடியிருப்பு மனைக்கான பட்டா வழங்க வேண்டும். குடியிருப்பு மனை தொடர்பாக பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மேலும், நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு சீரான முறையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் பி.காமராஜ் தலைமை வகித்தார். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் ஒன்றியச் செயலாளர் கே.ராதா, ஒன்றியப் பொருளாளர் ஜி.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் கு .ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் கே.தவபாண்டியன், வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் டி.கே.மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சந்திரசேகர், மாதர் சங்க செயலாளர் ஜா.ரிஷ்வானா பர்வின், விவசாய தொழிலாளர் சங்க துணைச் செயலாளர்கள் எம்.அசோக், டி.மகாலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் சு.பாலசுப்பிரமணியன், AIYF ஒன்றியச் செயலாளர் என்.செந்தில் வேலன், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் என்.டி.ஸ்டாலின்பாரதி, சி.பேச்சிமுத்து உள்ளிட்ட கட்சி மற்றும் சங்க நிர்வாகிகள், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா இன்றி நீண்டகாலமாக வசித்து வரும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை, போராட்டக்குழுவினர், மற்றும் மாதர் சங்கத்தினர் ஒன்றியத் தலைவர் பி.காமராஜ் தலைமையில் நீடாமங்கலம் வட்டாட்சியர் மகேஷ் குமாரிடம் வழங்கினர்.
வீட்டுமனைப் பட்டா இல்லாமல் வசித்து வரும் குடும்பங்களின் நீண்டகால கோரிக்கையை அரசு பரிசீலித்து, தகுதியான பயனாளிகளுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.