தேனி மாவட்டம் கம்பம் நகரில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ
செய்தியாளர்களிடம் அவர் கூறியது…
தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும், அனைவரும் சமமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகவும் அயராது பாடுபட்டார். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயம், பகுத்தறிவு, சமத்துவம் ஆகிய சிந்தனைகளை மக்களிடம் விதைத்த சமூக சீர்திருத்தப் போராளியாக பெரியார் திகழ்ந்தார்.
பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை, சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும், பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதையும் பெரியார் தொடர்ந்து வலியுறுத்தினார். கல்வியே சமூக முன்னேற்றத்திற்கான முக்கிய கருவி என்பதை எடுத்துரைத்து, அறிவும் சிந்தனையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டார்.
மனிதனை மனிதனாக மதிப்பது, பிறப்பால் உயர்வு-தாழ்வு இல்லை என்பதை நிலைநாட்டுவது, மூடநம்பிக்கைகளை அகற்றி பகுத்தறிவு சிந்தனையை வளர்ப்பது போன்ற பெரியாரின் கொள்கைகள், இன்றும் சமூக மாற்றத்திற்கான முக்கியமான அடித்தளமாக விளங்குகின்றன.
பெரியார் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவம், பெண்களின் உரிமை, கல்வி, சுயமரியாதை மற்றும் மனிதநேயம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது.
தந்தை பெரியாரின் எண்ணங்களை நெஞ்சில் சுமந்து, மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் தமிழகத்தில் புதிய மாற்றத்திற்கான மக்கள் நலப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் என்பது வெறும் பதவிக்காக அல்ல; மக்களுக்காக பணியாற்ற கிடைத்துள்ள பொறுப்பு என்ற எண்ணத்துடன் முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருகிறார். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழக்கூடிய தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது.
பெரியார் கனவு கண்ட சமத்துவமான சமூகத்தை உருவாக்கவும், சாதி-மத வேறுபாடுகளற்ற மனிதநேயச் சமுதாயத்தை கட்டியெழுப்பவும், கல்வி மற்றும் பகுத்தறிவு சிந்தனையை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லவும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அய்யர், ரீட்டா, கம்பம் நகர பொறுப்பாளர் சதீஷ்குமார், நகர பொறுப்பாளர் அபு கம்பம் தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார்
சட்டமன்ற உறுப்பினரின் தனி செயலாளர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ், ஹஸீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.