கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் “CAPTCHA ’26” என்ற தலைப்பில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன.
கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என். இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி இணைச் செயலாளர் ஆர். வசந்தன், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் சி. வாசுகி வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. ரேணுகா பேசுகையில், மாணவிகள் கல்வியுடன் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். மேலும், முனைவர் ஆராய்ச்சிப் படிப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் கல்லூரிக் காலத்தில் மேற்கொள்ளப்படும் திறன் மேம்பாட்டுப் படிப்புகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.
போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் கே. நித்தியானந்த குமாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இப்போட்டிகளில் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் குழுக்களாகப் பங்கேற்று, தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்று அதிக பரிசுகளைப் பெற்ற போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரிக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கேடயம் வழங்கப்பட்டது.
போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள், இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொண்டது தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் புதிய ஆக்கத்திறனையும் அளித்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியை என். கிருஷ்ணவேணி நன்றி கூறினார். துறைத் தலைவர் எஸ். பத்மபிரியா தலைமையில் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.