தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் இடைத்தேர்தல்: 22 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன!-29 மனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு.
தாராபுரம்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட 51 வேட்புமனுக்களில், 22 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலர் பிலிக்ஸ் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தப் பரிசீலனையின்போது, வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
மொத்தம் பெறப்பட்ட 51 வேட்புமனுக்களில், 22 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிலிக்ஸ் ராஜா அறிவித்தார்.
இதையடுத்து, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.