முதுகுளத்தூர்
செய்தியாளர்
ஆர்.செந்தில்குமார்
ராமநாதபுரம், செப்.17
ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்க் காஸ் நிறுவனம் சார்பில் சிஎன்ஜி மூலம் இயங்கும் அரசுப் பஸ்களின் வசதிக்காக, ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனையிலேயே எரிபொருள் நிரப்ப முதல் பிரத்யேக சிஎன்ஜி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி நகர எரிவாயு விநியோக நிறுவனங்களில் ஒன்றான திங்க் கேஸ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து ராமநாதபுரத்தில் தனது முதல் ‘கேப்டிவ்’ சிஎன்ஜி நிலையத்தை நேற்று தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு உள்ளேயே அமைந்துள்ள இந்த நிலையம், அப்பகுதியில் இயங்கும் 100-க்கும் மேற்பட்ட சிஎன்ஜி அரசு பஸ்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும்.
இதன் அடுத்தகட்டமாக ராமேஸ்வரத்தில் புதிய சிஎன்ஜி நிலையத்தை அமைக்கத் திங்க் கேஸ் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் அரசுப் பஸ்களுக்கான சிஎன்ஜி எரிபொருள் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், இதுபோன்று பல நிலையங்களை அமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ‘கேப்டிவ்’ சிஎன்ஜி நிலையம் என்பது அரசுப் பஸ்களுக்காக மட்டுமே பணிமனைக்கு உள்ளேயே அமைக்கப்படும் பிரத்யேக எரிபொருள் நிலையமாகும். பொதுப் போக்குவரத்தில் தூய்மையான எரிபொருளுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் இது செயல்படுகிறது. ராமநாதபுரத்தில் பொதுப் போக்குவரத்திற்கான தூய்மையான எரிபொருள் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும், சிஎன்ஜி அரசுப் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிப்பதிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
திங்க் கேஸ் நிறுவனத்தின் வலுவான குழாய் கட்டமைப்பு இந்த விரிவாக்கத்திற்குப் பெரிதும் உதவுகிறது. இதன் மூலம், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி (குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு ஆகியவற்றின் அதிகரித்து வரும் தேவையை நிறுவனம் பூர்த்தி செய்கிறது. ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் இந்நிறுவனம் 220 கி.மீ எம்டிபிஇ குழாய்களையும், 13 கி.மீ இரும்புக் குழாய்களையும் அமைத்து, மொத்தமாக 233 கி.மீ நீளத்திற்கு எரிவாயு குழாய் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. போக்குவரத்துத் துறைக்கு ஆதரவாக, இந்நிறுவனம் தற்போது 10 சிஎன்ஜி நிலையங்களை இயக்கி வருகிறது.
பொதுப் போக்குவரத்துக்கு மட்டுமின்றி, ராமநாதபுரத்தில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பிஎன்ஜி வழங்குவதிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்தில் தற்போது 3,036 வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு பயன்பாட்டில் உள்ளது; மேலும் 8,013 வாடிக்கையாளர்கள் இதற்காகப் பதிவு செய்துள்ளனர்.
பிஎன்ஜி பயன்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கான அரசின் வழிகாட்டுதலின்படி, பதிவு செய்துள்ள அனைவருக்கும் விரைவாக இணைப்பு வழங்குவதிலும், புதிய குடியிருப்புகளுக்கு இதை விரிவுபடுத்துவதிலும் நிறுவனம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அடுத்த 2 முதல் 3 மாதங்களில் ராமநாதபுரம் நகராட்சியின் 10 மற்றும் 12-வது வார்டுகளுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் விரைவில் 40,000 வீடுகளுக்கு பிஎன்ஜி எரிவாயு இணைப்பு வழங்குவதே நிறுவனத்தின் முக்கிய இலக்காக உள்ளது.
இது குறித்து திங்க் கேஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் திருக்குமரன் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு விரிவாக்கத் திட்டத்தில் தமிழ்நாடு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலம் முழுவதும் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி பயன்பாடு அதிகரித்து வருவதை ஆதரிக்கும் வகையில் வலுவான கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ராமநாதபுரத்தில் அரசுப் பஸ்களுக்காக பிரத்யேக சிஎன்ஜி நிலையத்தை அமைக்க தமிழக போக்குவரத்து கழகத்துடன் நாங்கள் இணைந்து செயல்படுவது, தூய்மையான பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான எங்கள் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்டமைப்பை விரிவுபடுத்தும் அதே வேளையில், போக்குவரத்து, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இயற்கை எரிவாயு எளிதாகக் கிடைப்பதை உறுதிசெய்வதோடு, தூய்மையான எரிசக்தியை நோக்கி மாநிலம் முன்னேறுவதற்கும் தொடர்ந்து ஆதரவளிப்போம்,” என்றார்.
இந்நிறுவனத்தின் ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு மண்டலத் தலைவர் அழகுராஜன் கூறுகையில், “ராமநாதபுரம் பணிமனையில் பிரத்யேக சிஎன்ஜி நிலையத்தைத் தொடங்குவது இப்பகுதிக்கு ஒரு முக்கியமான வளர்ச்சியாகும். இது அரசு பஸ்களுக்கு அருகிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியைத் தருகிறது. இதோடு மட்டுமல்லாமல், ராமநாதபுரத்தில் உள்ள மேலும் பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பிஎன்ஜி குழாய் மூலம் எரிவாயு வசதியை விரிவுபடுத்தி வருகிறோம். அடுத்தகட்ட விரிவாக்கத்திற்காக 10 மற்றும் 12-வது வார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களுக்கு விரைவாக இணைப்புகளை வழங்குவதிலும், ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் முழுவதும் இயற்கை எரிவாயுவை எளிதாகவும், நம்பகத்தன்மையுடனும் கிடைக்கச் செய்வதிலுமே எங்களின் முக்கிய கவனம் உள்ளது,” என்றார்.
ராமநாதபுரம் முழுவதும் விரிவான இயற்கை எரிவாயு கட்டமைப்பை உருவாக்குவதில் திங்க் கேஸ் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பிஎன்ஜி எரிவாயுவும், போக்குவரத்துத் துறைக்கு சிஎன்ஜி எரிவாயுவும் வழங்கப்படுகிறது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், எரிவாயு குழாய் கட்டமைப்பை விரிவுபடுத்துதல், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிக அளவில் பிஎன்ஜி இணைப்புகளை வழங்குதல் மற்றும் இப்பகுதி முழுவதும் சிஎன்ஜி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் நிறுவனம் தீவிர கவனம் செலுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.