தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி – மூலனூர் வஞ்சியம்மன் கோவில் பகுதியில் வாகனத் தணிக்கையில் சிக்கியது

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூலனூரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகனத் தணிக்கையின்போது, ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில், பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, மூலனூர் வஞ்சியம்மன் கோவில் பகுதியில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து, பெண் காவலர் ரஞ்சினி ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கோயம்புத்தூரில் இருந்து மூலனூர் நோக்கிச் சென்ற வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நகைப் பட்டறை உரிமையாளரிடம் விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், கோயம்புத்தூர் இடையார் வீதியைச் சேர்ந்த திரிலோக் (45) என்பவருக்குச் சொந்தமானவை எனத் தெரியவந்தது. இவர் நகைப் பட்டறை உரிமையாளர் ஆவார்.

கோயம்புத்தூரில் இருந்து மூலனூரில் உள்ள தனியார் நகைக்கடைக்கு விற்பனை செய்வதற்காகத் தங்க நகைகளைக் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ராமலிங்கத்திடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன.

முதல் முறையாக ரூ.1.40 கோடி தங்கம் பறிமுதல்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை இல்லாத வகையில், ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இவ்வளவு அதிக மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தாராபுரம் மற்றும் மூலனூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கான ஆவணங்கள் மற்றும் அவற்றின் உரிமை தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *