திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிருந்தாவன் நகரில் அமைந்துள்ள பூரண சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் இரண்டு நாள்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய நிகழ்வில் வேதிகா அர்ச்சனை, திரவியாகுதி, விமான கலச பிரதிஷ்டை, எந்திரம் பிரதிஷ்டை, மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் நடைபெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் கால பூஜையில் கோ பூஜை மற்றும் கும்ப பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பூர்ண ஆகுதி நடைபெற்றதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றன.
இதையடுத்து புனித நீர் நிரப்பப்பட்ட கடங்கள் சிறப்பு பூஜைகளுடன் புறப்பாடு செய்யப்பட்டன. மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ கடங்கள் ஊர்வலமாக கோவில் விமான கலசம் அமைந்துள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு பாஸ்கர சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விமான கலசங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் கோவில் மூலவர் பூரண சித்தி விநாயகர் பெருமானுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பூரண சித்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு திருப்பணி கமிட்டியினர் மேற்கொண்டனர். முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ப.இளஞ்சேரன் மற்றும் நிர்வாகிகள் வி.செல்வராசு, வி.காமராஜ், அருண் அறிஞன், வி.ராஜா உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.