தூத்துக்குடி: மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் காமராஜ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, “போதை இல்லாத தூத்துக்குடியையும், புகையிலையில்லா தமிழ்நாட்டையும் உருவாக்குவதே எங்களது எதிர்கால லட்சியம்” என உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட சுகாதாரப் பேரவை மற்றும் மாவட்ட புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு குழு உறுப்பினருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ், காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா ஆகியோர் போதை மற்றும் மதுப்பழக்கத்தால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து விளக்கினர். மருத்துவ அலுவலர் டாக்டர் பி. இனிகோ மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு சமூகப் பணியாளர் வ. ரொசாரி பாத்திமா ஆகியோர் ஒலி–ஒளிக் காட்சி மற்றும் விளக்கப் படங்களின் மூலம் போதை, புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் மருத்துவ ஆலோசனையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் போதைப் பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதுடன், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இளைஞர்களை கல்வி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தவும் உறுதிமொழி ஏற்றனர்.
முன்னதாக மதர் சமூக சேவை நிறுவன துணைத் தலைவர் சுதாகர் வரவேற்றார். காமராஜ் கல்லூரி முதல்வர் பானுமதி வாழ்த்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் எஸ். பானுமதி நன்றி கூறினார். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.