கோவை மத்துவராயபுரத்தில் அமைந்துள்ள CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில், ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அறுவடை திருநாள் பண்டிகை இன்று (20.09.2026) மிகச் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது. இவ்வாண்டின் சிறப்பு நிகழ்வுகளை பேராசிரியர் டாக்டர் நிர்மல் அவர்கள் ரிப்பன் வெட்டி முறைப்படி துவக்கிவைத்தார்.
இவ்விழாவில் ஆயர்கள் ராபின்சன் பிரபாகரன், கருணாகரன், ஜெபதுரை, பொருளாளர் ஆனந்த ஆசீர் மற்றும் திருமண்டல உறுப்பினர்கள் ஜெபசிங், ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். இறைவனின் அளப்பரிய ஆசீர்வாதங்களுக்கும் விளைச்சலுக்கும் நன்றி செலுத்தும் விதமாக நடைபெற்ற இத்திருநாளில் சிறப்பு ஆராதனைகளும், தோத்திரப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. சபை மக்கள் தங்கள் விளைபொருட்கள் மற்றும் தானியங்களை இறைவனுக்குப் படையலாக அர்ப்பணித்ததுடன், தொடர்ந்து நடைபெற்ற ஏல விற்பனையிலும் பண்டிகைச் சந்தையிலும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இக் கொண்டாட்டத்தில் சபை மக்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாகத் திரளாகக் கலந்துகொண்டு இறைவனை மகிமைப்படுத்தினர்.