மன்னார்குடியில் இலவச மருத்துவ முகாம்-500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – எஸ்.காமராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மன்னார்குடி., செப். 20-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கட்டட பொறியாளர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்ஸ் சங்கம், மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ச் பவுண்டேஷன் ஆகியவற்றின் சார்பில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் காது, மூக்கு, தொண்டை தொடர்பான நோய்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 6 வயதுக்குட்பட்ட காது கேளாமை மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள தகுதியானவர்களுக்கு பரிந்துரைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மன்னார்குடி கட்டட பொறியாளர்கள் சங்கத் தலைவர் எம்.சரவணகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜெ.கோபிநாத், பொருளாளர் என்.அரவிந்தன், துணைத்தலைவர், திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.சூரியபிரகாஷ், கே.மருதவாணன், ஜே.ஆகாஷ் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் எஸ்.திருநாவுக்கரசு நன்றி கூறினார்.