புதுச்சேரி மாநில விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தேவஸ்தானத்தின் 46-ஆம் ஆண்டு விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற விஸ்வகர்ம மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேருவும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். பெற்றோர்களுடன் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர்.
விழாவிற்கு விஸ்வகர்ம மகாஜன சங்கத் தலைவர் சண்முகம் ஆச்சாரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆச்சாரி, செயலாளர் சீனிவாசன் ஆச்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள், இளைஞரணி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கல்வியில் சாதித்த மாணவர்களை பாராட்டி கவுரவித்த இவ்விழா, இளம் தலைமுறையினர் கல்வியில் மேலும் சாதிக்க ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.