மன்னார்குடி., செப்.22-

சாலையோர கடைகளை முறைப்படுத்தக் கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பள்ளி வளாகங்கள் அருகில் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில் மினி லோடு வேன்கள், தள்ளுவண்டிகள் உள்ளிட்டவற்றின் மூலம் உணவு மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சுகாதாரமற்ற முறையிலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களின் வாசல்களை மறிக்கும் வகையில் தள்ளுவண்டிகள் மற்றும் வாகனங்கள் மூலம் வியாபாரம் நடைபெறுவதால், முறையாக வரி செலுத்தி வரும் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

3 ஆண்டுகளாக கோரிக்கை

சாலையோர வியாபாரிகளை அரசாணை எண் 151-ன் அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி. ஆனந்த் கூறியதாவது:-

சாலையோர வியாபாரிகளை அரசாணையின்படி முறைப்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும், குடியிருப்பு சாலைகளிலும் கடைகள் அமைக்கக்கூடாது என அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம்.

சாலையோர கடைகளால் ஏற்கனவே செயல்பட்டு வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை மனுக்கள் அளித்தும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்தகட்டமாக நகராட்சி வரி, வணிக வரி உள்ளிட்ட அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வர்த்தகர்கள் ஒன்றிணைந்து அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவோம் என்று
தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று சேர்ந்த வர்த்தகர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *