திருவொற்றியூர்: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு கதறி அழுத இரண்டு வயது பெண் குழந்தையை தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து பத்திரமாக மீட்டனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் டி-2 வீட்டில் வசித்து வருபவர் குமாரசாமி. இவர் எல்&டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு அகல்யா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது.
குமாரசாமி பணிக்கு சென்றிருந்த நிலையில், பிரியா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். அப்போது, அருகில் வசிக்கும் அக்கம்பக்கத்தினரிடம் பிரியா பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் குழந்தை அகல்யா வீட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டது.
இதையடுத்து குழந்தை கதறி அழுததால், அதிர்ச்சியடைந்த பிரியா மற்றும் அக்கம்பக்கத்தினர் கதவு மற்றும் ஜன்னலை திறக்க முயன்றனர். ஆனால், கதவை திறக்க முடியாததால் உடனடியாக திருவொற்றியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர் பிரதாப் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ‘காம்பி டூல்ஸ்’ கருவியின் உதவியுடன் வீட்டின் கதவை திறந்து, உள்ளே கதறி அழுது கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அகல்யாவை பத்திரமாக மீட்டனர்.
தகவல் கிடைத்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் அரை மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்களை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் பாராட்டினர்.
கதவு உட்புறமாக பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் சிக்கிய இரண்டு வயது குழந்தையை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவம் திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.