துறையூர் அக்-08
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் ஏரியில் அரசு அனுமதி இன்றி வண்டல் மண் அள்ளுவதாக நேற்று இரவு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜிக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் துறையூர் வட்டாட்சியர் சித்ராவை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் சித்ரா உத்தரவு படி நேற்று நள்ளிரவு 11 மணியளவில் மண்டல துணை வட்டாட்சியர் ராமு, வருவாய் ஆய்வாளர் ஆசைத்தம்பி, கிராம நிர்வாக அலுவலர் போஜராஜன் ஆகியோர் போலீசாருடன் சம்பந்தப்பட்ட கீரம்பூர் ஏரிக்கு சென்ற போது வண்டல் மண் கடத்தியவர்கள் வாகனங்களை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வண்டல் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பதிவு எண் இல்லாத ஒரு ஜேசிபி வாகனம், இரண்டு டிப்பருடன் கூடிய டிராக்டர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய வாகன உரிமையாளர்கள் யார் என்பது குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நள்ளிரவில் வருவாய் துறையினர் வண்டல் மண் கடத்திய வாகனங்களை பறிமுதல் செய்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்