பேராவூரணி, அக். 24:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரராகவபுரம் கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடி, வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், விவசாயத்தின் அவசியம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் வேளாண்மையின் பங்கு குறித்து மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். மேலும், உலக உணவு தினத்தின் முக்கியத்துவத்தையும், உணவு உற்பத்தியில் விவசாயிகளின் பங்களிப்பையும் எடுத்துரைத்தனர்.

கல்வியும் விவசாயமும் இணைந்து செயல்படும்போது சமூகத்தில் ஏற்படும் நேர்மறையான மாற்றங்கள் குறித்தும் இந்நிகழ்ச்சி எடுத்துரைத்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தல், நேர மேலாண்மை மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடுதல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மாணவிகள் விவசாயிகளின் வயல்களில் நேரடியாக இறங்கி நாற்று நடவுப் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் விவசாயப் பணிகளின் நடைமுறைகளை அறிந்துகொண்டதுடன், விவசாயிகளின் உழைப்பு மற்றும் உணவு உற்பத்தியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தனர்.

கிராம வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கேற்று, வேளாண்மையின் எதிர்காலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவிகளின் முயற்சியை கல்வியாளர்கள், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *